தனக்குள்ளே சிந்தும் ஒளி - தி சந்தானம்
If music be the food of love play on,
Give me excess of it, the surfeiting,
May sicken the appetite, and so die.
நல்ல இசையைக் கேட்க வாய்க்கும் போது எல்லாம் அப்பா இதைச் சொல்வார். ஏற்ற இறக்கத்தோடு உணர்ச்சி பொங்கச் சொல்வார். இத்தனைக்கும் அவர் அதிகம் பேசுபவர் அல்ல. இசை அவரை நெகிழ வைத்திருக்கிறது. கண்களின் விளிம்பில் நீர் கட்டி விடும். கண்ணாடியைக் கழற்றி விட்டு அழகாகத் துடைத்து விட்டுக் கொள்வார். கர்நாடக இசை அவருக்குப் பிடிக்கும். அவர் பக்கத்தில் அமர்ந்து கச்சேரி கேட்பது ஒரு சிறந்த அனுபவம். இசைக்கு முழுவதுமாகத் தன்னைக் கொடுத்து விடுவார். ஓரு அசைவோ சிலிர்ப்போ வெளியில் தெரியாது. ஏதோ ஒரு ஆழத்தில் திளைத்திருப்பவராய் இருப்பார். ஆரம்ப காலத்தில் அவரது இந்த அனுபூதியைக் கலைக்கக் கூடாது என்று தெரியாது. அவசரப்பட்டு பாடகர் பாடும் ராகத்தைத் தவறாக ஊகித்து அவரிடம் சொல்லுவேன். . மெல்ல அவர் உலகத்திலிருந்து மீண்டு சன்னக் குரலில் கவனி என்று சொல்வார். பிறகு எல்லாம் அவருடன் கச்சேரி கேட்கும் போது இசையின் ஒரு சிறு கணத்தைக் கூடத் தவற விடத் தோன்றாது. அவர் கற்பிப்பது எல்லாம் அப்படித்தான். கற்பிக்காமல் கற்பிக்கும் முறை அவருடையது.
என்னுடைய பள்ளியிலே ஆசிரியராக இருந்தார். ஆனால் எனக்குப் பாடம் எடுத்தது இல்லை. அவர் ஆங்கில வகுப்பு எடுக்கும் விதத்தை மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். What is this life if full of care, We have no time to stand and stare என்று துவங்கும் கவிதை பாடத்தில் வரும். We have no time to stand and stare என்று சொல்லியபடி வார்த்தைகளின் லயத்துக்கு ஏற்பத் தோள்களை உயர்த்தித் தாழ்த்துவாராம். ஆங்கிலத்தின் மேல் அவருக்கு அபாரமான காதல் இருந்தது. ஆங்கிலம் நன்றாக எழுதுவார். பள்ளி ஆண்டு அறிக்கை தயாரிப்பதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு என்று அறிந்திருக்கிறேன். நல்ல ஆங்கிலம் அவர் எல்லோருக்கும் விட்டுச் சென்ற சொத்து. ஏதாவது வார்த்தைக்குப் பொருள் கேட்டால் அகராதியைப் பார் என்பார். அப்படித் தான் அகராதியில் பொருள் தேடும் பழக்கம் உருவானது.
கல்லூரியில் படிக்கும் போது The Indian Jugglers என்று ஒரு உரைநடைப் பாடம் வந்தது. அது William Hazlitt எழுதியது. அதில் ஒரு பத்தி வரும். அது ஒரே வாக்கியத்தில் அமைந்திருக்கும். To catch four balls in succession …என்று துவங்கி beauty triumphing over skill என்று முடியும். அது மட்டுமே கிட்டத்தட்ட 170 வார்த்தைகள். வார்த்தைகள் பிறழாமல் இதை அப்படியே அப்பா ஒரு முறை சொன்னார். அசந்து போனேன். அவரைப் பின்பற்றி நானும் அதைப் பாடம் செய்து சொல்ல முயன்று இருக்கிறேன். முழுதும் அதில் வெற்றி கண்டது இல்லை.
பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்திருந்த காலம். அப்பாவிடம் கேட்டேன். பாரதி பாடல்களில் எது உங்களுக்குப் பிடிக்கும் என்று. அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்ற பாடலைச் சொன்னார். எத்தனையோ பாடல்கள் இருக்க இதை ஏன் சொன்னார் என்று யோசித்தேன். பல நாட்களுக்குப் பின் பாடல் வரிகளை மனதில் ஓட்டிய போது புரிந்தது. சரண வரியான “பக்தி என்று ஒரு நிலை வகுத்தாய் எங்கள் பரமா பரமா பரமா"என்ற வரி அவருக்கு உவப்பானதாக இருந்திருக்கக் கூடும்.
வாழ்க்கைத் துன்பங்கள் அவரை அலைக்கழித்து இருக்கின்றன. கஷ்டங்களை அவர் பொறுத்துக் கொண்டார். வாய் விட்டு எதுவும் சொன்னதில்லை. ஏழு வயதில் தந்தையை இழந்தவர். தானே தனக்குள்ளே சிந்தும் ஒளி போல ஒரு ஆளுமை, தானே அவருக்கு வாய்த்தது. ஓரு மெளனம் குளிர் மேகம் போல அவரைச் சுற்றி எப்போதும் சூழ்ந்திருந்தது. சிந்தனை வயப்பட்டவராக இருப்பார். காற்றில் ஏதாவது வார்த்தைகளை எழுதிப் பார்த்தபடியே இருப்பார். அவர் எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். அதில் அன்பும் கரிசனமும் இருக்கும்.
கண்ணாடி அணிந்த அவரது தோற்றம் மனதில் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. நல்ல கண்கள். துயரத்தின் சாயையோ மகிழ்ச்சியின் ததும்புதலோ அதில் இருக்காது. நீண்ட மூக்கு. சிறிய உதடுகள். கன்னத்தில் சதை ரொம்ப இருக்காது. சற்றே நீளமான தாடை. நெற்றியில் புரளும் சிகையை ஒதுக்கி விட்டுக் கொள்வார். அவருடைய அங்க அசைவுகளில் ஒரு மேற்கத்தியத் தன்மை இருக்கும்.
நிறைவான வாழ்க்கை அவருடையது. இறுதி வரை அதில் எந்தப் புகாரும் கிடையாது. தனது திறமைகள் குறித்து எந்தப் பெருமிதமும் கிடையாது.
பள்ளி ஆசிரியரானது அவரது தேர்வு TST என்று அவர் அழைக்கப்பட்டார்.. அந்தப் பெயர், பள்ளி ஆசிரியர் என்ற அடையாளங்களைத் தாண்டி பலதும் உண்டு. எல்லாவற்றையும் முழுமையாக வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
7.12.2024 இன்று அவரது நூற்றாண்டின் நிறைவு.
Comments
Post a Comment